இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட நாமெல்லோரும் ஒரு நாளைக்கு சில(பல) மணிநேரங்களை கணிணியுடன் கழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.டாம் கூட ஜெர்ரியை துரத்தி துரத்தி அலுத்திருக்கும், நாம் ஒரு நாளில் மௌஸை துரத்துமளவுக்கு துரத்தியிருந்தால்.
கூப்பிடுபவர்கள் கூடவெல்லாம் கேண்டின் போக கம்பெனி கொடுப்பது, கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கிக்கொண்டு மீட்டிங்குகளில் உட்கார்ந்திருப்பது, அம்மணிகளை தேடிப் போய் கடலை போடுவது என்றெல்லாம் ஓடாய் உழைத்தாலும் சில மணி நேரங்களாவது கணிணித் திரைக்கு முன் சீரியஸாய் முகத்தை வைததுக்கொண்டு பதிவுகளையாவது படித்துக்
கொண்டிருக்காவிட்டால் "இவனுக்கெல்லாம் வாங்கற சம்பளம் எப்படித்தான் செரிக்குதோ?" என்று உலகம் நம்மை ஏசும்.
வீட்டிற்கு வந்தாலும் இதையே தொடர்கிறோம்.அலுவலகத்தில் "நான் ரொம்ப பிஸி" என்று காட்டிக் கொள்வதற்காகவது வீட்டிலும் சில மணிநேரங்கள் அலுவலக வேலை செய்வது போல் நடித்துக்கொண்டே பதிவுகளை மேய்வது, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் பதிவு எழுதுவது, பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணுவது, ட்விட்டர், ஆர்குட், ஜி-டாக், ஃபேஸ் புக், ஃப்ளிக்கர், பிக்காஸோ என்று ஒரு கண்றாவியையும் விடாது ஓப்பன் பண்ணி பல மணிநேரங்களை தொடைக் கணிணியும் கையுமாக கழிக்கிறோம்.
இப்படி கணிணிகளுடன் நீண்ட நேரம் செலவிடுவதால் நமக்கு நேரக் கூடிய உடல் உபாதைகள் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
நடு இரவில் திடீரென்று எழுந்து கையை உதற வேண்டும் போல் தோன்றுகிறதா? உள்ளங்கையில் அரிப்பு, வலி, மரத்துப் போதல போன்றவை அறிகுறிகள் இருந்தால் நீங்கள் "கார்பல் டனல் சிண்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome) என்ற உபாதையின் ஆரம்ப நிலையில் இருப்பதாக அர்த்தம்.
ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்காரம்மா தோசை வார்க்க சொன்னதோ, மனைவியுடன் ஷாப்பிங் போய் வருகையில் 20 கிலோ பையை பணிவுடன் தூக்கிக் கொண்டு வந்ததோதான் இதற்கு காரணம். ரெண்டு நாள்ல சரியா போயிரும்னு மனதை சமாதானப்படுத்திக் கொள்பவர்களுக்கு அடுத்த சில நாட்களில் மேலே சொன்ன அறிகுறிகள் பகலிலும் வர ஆரம்பிக்கும். மேலும் பேனா, பென்சில் போன்றவற்றை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் போகலாம். அடுத்த கட்டத்தில் சூடு, குளிர்ச்சி போன்றவற்றை உணர முடியாமல் போகக் கூடும்.
இந்த கார்ப்பல் டனல் என்பது நம் கைகளில் இருக்கும் மணிக்கட்டு பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் சதைகளுக்கு இடையிலிருக்கும் ஒரு மிகச்சிறிய குகை. நம் கை விரல்களுக்கான கட்டளைகளை மூளையிலிருந்து கொண்டு செல்லும் நரம்பு இந்த குகை வழியாகத்தான் செல்கிறது.பல மணி நேரங்களுக்கு கீ போர்ட் மற்றும் மௌஸை இயக்குவது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற ஒரே மாதிரியான இயக்கங்களை திரும்ப திருமப செய்துகொண்டே இருப்பவர்களுக்கு இந்த குகைப்பகுதியில் இருக்கும் சதை மற்றும் சதைகளை எலும்புகளுடன் இணைக்கும் டெண்டன்களில்(Tendons) வீக்கம் ஏற்படக் கூடும்.
ஏற்கெனவே மிகச்சிறிய அளவில் இருக்கும் குகை, இத்தகைய வீக்கங்களால் மேலும் குறுகி, ஊடே செல்லும் நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.இந்த அழுத்தமே மேலே சொன்ன உபாதைகளுக்கான காரணம்.
தொழிற்சாலைகளில் அசெம்ப்ளி போன்ற துறைகளில் தொடர்ந்து தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்பவர்களுக்கும் இந்த பிரச்னை வருவதற்கான சாத்தியம் அதிகம்.
"அடடே... ஏற்கெனவே எனக்கு அப்பப்போ இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கே" என்பவர்கள் உடனடியாக தேவன் மாயம், ப்ரூனோ (ருத்ரன் இதுக்கு தோது பட மாட்டார்) போன்ற நல்ல மருத்துவர்களை அணுகுவது உசிதம்.அவர்களோ அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் சிறப்பு மருத்துவர்களோ மருந்து, மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை மூலம் குண்ப்படுத்தி விடுவார்கள்.
ஆண்களைவிட பெண்களுக்கே எளிதில் இந்த பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் அவர்களுக்கு இயற்கையிலயே இந்த கார்ப்பல் டனல் குகையின் சைஸ் சிறியது. ஆகவே சிறிய அளவு வீக்கத்திற்கு கூட பாதிப்பு அதிகம் வரக் கூடும்.
"ஹையா.. எனக்கெல்லாம் இந்த பிரச்னை இல்லையே" என்பவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளாக பின்பற்ற வேண்டியவை...
மடிக் கணிணி என்பது அடிக்கடி பயணிப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உபயோகிப்பதாக இருந்தால் எக்ஸ்டெர்னல் மானிட்டர், கீ போர்ட் மற்றும் மௌஸ் உபயோகிப்பது நல்லது.
மணிக்கட்டு பகுதியை முடிந்த அளவு நேராகவே வைத்திருக்க் வேண்டும். மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ வளைக்காமல் இருத்தல் நலம்.
கீ போர்டும் மௌஸும் பக்கம் பக்கமாக ஒரே தளத்தில் இருக்க வேண்டும்.
மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கைகளை நேச்சுரல் ஆங்கிளில் வைத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து ஓரே மாதிரியான வேலையை செய்யாமல் ஷெட்யூல் செய்து கொள்ள வேண்டும். மணிக்கு ஒரு தடவை சின்ன ப்ரேக் அல்லது வேறு வேலைகளை செய்ய வேண்டும்.நம்மில் பலரும் காலையில் நுழைந்தவுடனேயே மேஜையை க்ளீன் செய்வது, இருக்கும் காகிதங்களையெல்லாம் பைல் பண்ணுவது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டுதான் ஒரேயடியாக தொடர்ந்து வேலையில் உட்காருவோம். அதற்கு பதிலாக இத்தகைய சிறு வேலைகளை மணிக்கொன்றாக செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் சுழற்சி முறையில் ஒருவருக்கொருவர் வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மேலே சொன்னவற்றையெல்லாம் பின்பற்றுவதன் மூலம் வாயில் நுழைவதற்கே கஷ்டமான பெயர் கொண்ட "கார்ப்பெல் டனல் சிண்ட்ரோம்" உடலுக்குள் நுழையாமல் காத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment