Wednesday, May 25, 2011

நினைவெல்லாம் நீ..!


மறக்க
முயலும் போதுதான்
உயிர்ப்பிக்கின்றன
உன் நினைவுகள்...


புதைக்க நினக்கும் போதுதான்
கீறித்துளிர்க்கின்றன
உந்தன் ஞாபகங்கள்...

அழிக்க
எண்ணும் போதுதான்
கண்முன் தெரிகின்றன
உந்தன் பிம்பங்கள்...

என்ன செய்ய
உன்னை நினைத்து விட்ட
குற்றத்திற்காக நான்
செத்து விடவா முடியும்?

இன்றுவரை கூட
மறந்து விடத் தோன்றவில்லை
நேற்றின் பிரதிபலிப்பால்
மனசின் வேதனை எளிதில் ஆறாது...

முகம் மறக்கும் முன்பே
முகவரியை தொலைத்து நிற்கிறது
என் வாழ்க்கை...

நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
நிறைவேறாத ஆசைகளின் அலையிலே
சுழலுகின்ற மனசு
மீண்டும் வருமென்ற நம்பிக்கை
சிறிதும் எனக்கில்லை....

வாழவேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தால்
எத்தனை வேதனைகளைத்தான்
விருதுகளாய் பெறுவது
காலம் கேள்வி கேட்க
பதில் சொல்ல மறுக்கிறது மனது...

இனியவளே!
புரட்டியது புத்தகத்தை
என்றாலும் அதில்
புதைந்திருப்பது
உன் புகைப்படம்...

வாழ்க்கையின்
முதல் படியேறி
வழுக்கி விழுந்தவன் நான்
எனக்கு வழிகாட்டியாய்
வந்தவள் நீ...

காவிய பெண்ணே
நடந்து பார்க்கலாம்
வாழ்க்கையை நோக்கி
நமக்கு
வழி தெரியும் வரை...

வாழ்க்கை பாதையில்
நான் பயணித்த போது
வழுக்கி விழுந்தது
பள்ளம் அல்ல
அது உன் உள்ளம்...


தொடரும் நினைவுகளுடன்,,,, 

No comments:

Post a Comment